செல்வி. ஹரிஷ்ணவி கங்காதரன்

2016 பெப்ரவரி 16 அன்று மதிய வேளை வவுனியா உக்குளான்குளத்தில் உள்ள தனது வீட்டில் 13 வயதான கங்காதரன் ஹரிஷ்ணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததாகக் கண்டறியப்பட்டது. வவுனியா விபுலானந்த வித்தியாலயத்தின் ஓர் அறிவுக்கூர்மையான இளம் மாணவியான ஹரிஷ்ணவி தான் ஓரளவு சுகவீனமுற்றிருந்ததாக உணர்வினைக் கொண்டிருந்ததினால் அன்றைய தினம் பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டில் தங்கியிருந்ததுடன், தனது புதிய சீருடையானது தனக்கு அதிகளவு கட்டையாக இருப்பதாக தனது தாயாரிடம் முறையிட்டுமுள்ளார். அந்நேரம் பாடசாலை மணி அடித்ததினாலும், பாடசாலையில் ஆசிரியர் ஒருவரான அவரது தாயார் பாடசாலைக்குச் செல்லவேண்டியிருந்ததினாலும், வீட்டின் உள்ளேயே இருக்குமாறு ஹரிஷ்ணவிக்கு கூறிவிட்டு, தனது ஏனைய இரு பிள்ளைகளுடன் (வயது 15 மற்றும் 10) காலை 7.50 மணி போல் பாடசாலைக்குச் சென்றார்.

படிப்பிக்கும் வேலைகள் அதிகமாக இருந்ததினால், பாடசாலை முடிந்தவுடனே அவரது தாயால் வீட்டுக்கு இயலவில்லை. இதனால், அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு பிற்பகல் 2.15 மணியளவில் வந்து, தனது சைக்கிளை நிறுத்தியபோது, அவரது மகன் வீட்டின் உள்ளே சென்று சத்தமிட்டபடி வெளியே வந்து, உள்ளே சென்று தனது சகோதரிக்கு என்ன நடந்துள்ளது எனப் பார்க்குமாறு தாயிடம் கூறினார். தாய் உள்ளே ஓடிச் சென்றபோது நிலத்தில் இருந்து ஓர் அடி மேலாக கழுத்தைச் சுற்றி சேலையொன்று இறுக்கமாகச் சுற்றப்பட்டும், மறுமுனை கூரையுடன் கட்டப்பட்டிருந்த நிலையிலும் தனது மகள் நிமிர்ந்த நிலையில் நிற்பதைக் கண்டார். தனது பிள்ளை விளையாட்டுக்கு தன்னைப் பயமுறுத்துவதற்காக அவ்வாறாகச் செய்வதாக நினைத்த தாய், உடனடியாகச் சேலையை அவிழ்க்க, மகளின் உடல் நிலத்தில் விழுந்தது. கீழே கிடந்த மகளை தாய் உடனடியாக நிமிர்த்திவிட்டு, அவர் மயங்கிவிட்டார் என அனுமானித்து கட்டிலின் மேல் கிடத்தினார். அதேவேளை, வைத்தியசாலைக்கு ஹரிஷ்ணவியைக் கொண்டு செல்வதற்கு வாகனமொன்றை ஏற்பாடு செய்யுமாறு மகனுக்கு தாய் அறிவுறுத்தினார். இதனிடையே, அருகில் இருந்த தனியார் சிகிச்சை நிலையத்திலிருந்து வைத்தியர் ஒருவர் அங்கு வந்து, ஹரிஷ்ணவியைப் பரிசோதித்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார்.

இதன் பின்னர் சம்பவம் நடந்த இடத்திற்கு பொலிஸார் வந்து விசாரணைகளை நடத்தியதுடன், மரண விசாரணை அதிகாரியும் அங்கு வந்து, உடலைப் பரிசோதித்து விட்டு, அதை வீட்டிலிருந்து கொண்டு சென்றார். ஹரிஷ்ணவியின் வயிற்றில் சில கடித்த அடையாளங்கள் இருந்துள்ளன.

வீட்டின் நிலம் முழுவதும் உடுப்புக்களும், புத்தகங்களும் வாரியிறைக்கப்பட்டிருந்ததுடன், சுவர் கடிகாரம் நிலத்தில் விழுந்து கிடந்ததுடன், அது 11.30 மணியில் நின்றிருந்தது. அவர் தற்கொலை செய்திருப்பார் என மக்கள் வதந்தி பரப்பியபோது, கூரையுடன் சேலையைக் கட்டுவதற்கு ஏறுவதற்காக அங்கு நாற்காலிகளோ அல்லது வேறு ஏதாவதோ இருக்கவில்லை எனக் குடும்பத்தினர் தெரிவித்தனர். உணவு பரிமாறப்பட்டு, ஒன்றாகக் குழைக்கப்பட்ட பாத்திரம் சமையலறை நிலத்தில் இருந்ததோடு அது உட்கொள்ளப்பட்டிருக்கவும் இல்லை. சகல பானைகளும், பாத்திரங்களும் அவற்றின் மூடிகள் திறக்கப்பட்ட நிலையிலும் இருப்பதைக் குடும்பத்தினர் கண்டதுடன், அந்நேரத்தில் அனேகமாக யாரோ ஒருவரினால் ஹரிஷ்ணவி அழைக்கப்பட்டிருக்கிறார் எனக் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

ஹரிஷ்ணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, குரல்வளை நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக 2016 பெப்ரவரி 19 அன்று விடுவிக்கப்பட்ட சட்ட மருத்துவ அலுவலர் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.